Friday, October 12, 2007

உன்னையும் என்னையும் நினைத்து

அன்றொருமுறை கேட்டு
நீ முடியாதென்றதும் மறந்து விட எத்தனித்தும் முடியவில்லை

இன்றும் உன் நினைவுகள் வருகின்றன,
தவறென்றுசொல்லி தாலி தொட்டுப் பார்த்து
காற்றினைப் போல என்னுள் நிறைந்திருக்கும் உன்னை
வெளியேற்றி
மனவாசலடைத்து உள் திரும்ப
அரியாசனத்திலமர்ந்து முறுவலிக்கிறாய்,

வலியெப்போது போகும்?

Labels:

Thursday, May 24, 2007

நாள்

வழி நெடுகலும்
வழிந்தோடும் வியர்வையின் வாசம்
குருதி வீச்சோடு
சேரும் நல்முகூர்த்தம் சொல்ல
மனித உருவில் யமன் வருவான்
அச்சப்பட்டாலும் எச்சமிட்டாலும்
பலன் ஒன்றுதான்
பல்லி பட்டால் பலன் சொல்லும் பஞ்சாங்கத்தில்
சன்னம் உடலில் பட்டால்
என்னவென்று எழுதவில்லை

முடிச்சவிழ்ந்து கட்டினதெல்லாம்
நடுத்தெருவில் சிதறும்
அவசரமாய்ப் பொறுக்குவதில்
சுதந்திரமோ
நிம்மதியோ இல்லை.
நீள்கின்ற தெருவும்
அதை விடவும் நீளமான இரவும்
கருமை படர்விக்கும்.
சாலையின் குண்டும் குழியும் போல மனது

Labels:

Friday, May 18, 2007

மீள் அறிமுகம்

தூரம் அதிகரிக்க
உருவங்கள் சிறுக்கின்றன
மீண்டும் அவை பெருக்க வழியுண்டா
இது நிகழத் தொடங்குகையிலேயே
எனக்குத் தெரிந்து போனது
ஆனாலும் நீயும் உணர்ந்திருக்கிறாய்
என்பது
நேற்று வரை தெரியவில்லை.

பணியும் பயணமும் விழுங்கும் மணிப்பொழுதுகள்
நம் சேர்ந்திருக்க வேண்டியவை
வாழ்க்கையை வாழ்கிறோமென்று
சொல்லிச் சொல்லியே
வாழாமல் நிற்கிறோம்

தெரியவில்லை நண்பனே,
தூரத்திலாவது
சமாந்தரக் கோடுகள் சேருமாவென்று!
ஆனாலும் பரவாயில்லை வா..
காதலென்று சொல்லி நம்மை
மீள அறிமுகஞ் செய்து கொள்வோம்..
நேரமிருக்குமா நமக்கு?

Labels:

Thursday, May 17, 2007

ஒரு நடிகனின் கேள்வி

என்னை இன்னுமின்னும் வருத்தாதே..
இதற்கு மேலும் ஓங்கியடிப்பேன்
அதன்பின் என்னைப் பிடிக்காமல் போயிருக்கிற
உனக்கும்,
உன்னைப் பிடிக்காமல் போயிருக்கிற
எனக்கும்
இன்னும் நீண்டு போகும் பொழுதுகள்.

இரத்தமில்லாப் போரின் சாட்சியமாய்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
சொல்லடிகள்
பொறுக்கிக் கொள்ளும் இளந்தளிர்
தூவியது எமக்கு மறந்து போன பொழுதொன்றில்
கணநேர எரிச்சலில்
அன்பான சகோதரத்துக்கு
சேகரித்த சொல்லால் அடித்து விடுவது கண்டு
திகைத்திருப்போம்
எங்கே பொறுக்கியிருக்கக் கூடும் என்று.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதாம்
காதலாகிக் கசந்து
அதன் பின்னே கண்ணீர் மல்குவதை
யாரிடம் போய்ச் சொல்வோம்?
சிறுதளிருக்காய் பார்த்து நிற்கிற போதில்
வலுவிழந்து போகும் வாழ்க்கைக்கு
என்ன முடிவென்று கொள்ள?

உனக்கும் எனக்குமான நம் பொழுதுகள்
இப்போதெல்லாம் கனவிலேயே
வீடென்ற ஞாபகம் தரும்
கசப்பு நிறையும் நாட்களும்
பதைபதைப்பாய் நகரும் வார இறுதியும்
சொல்லும் கதையை
வெளிப்பார்வைக்குத் தெரியாமல்
மற்றவர்களுக்குப் பயந்து நீ
காட்டிச் செல்லும் நாடகத்தின்
கால அளவென்ன - அவசரமாய்த் தெரிய வேண்டும்
அரிதாரம் மூச்சு முட்டுகிறது.

என்னை இன்னுமின்னும் வருத்தாதே..
மூட முடியாத கொதிக்கின்ற உலையும்
ஊர்வாயும்போலத்தான்
வாழத் தவிக்கும் என் அவாவும்
நம் விடுதலை எந்தப்பக்கம்?

Labels:

காணாத உன்னைத் தேடி



{{image source: www.eamel.net/images/crying-baby.jpg }}

சொன்னது கேட்டேன்
அதன் படியே வந்திருக்கிறேன்.
தேடுகிறேன், உன்னைக் காணவில்லை
வசிப்பிடங்கள் இத்தனையா உனக்கு?
அதிலும் சொத்துப் பிரிக்க எத்தனைபேர்
பிடிக்காமல் ஓடிவிட்டிருக்கக் கூடும் நீ
புரிகிறது எனக்கு,
ஆனாலும் அழுகின்ற உள்ளங்கள் என்ன செய்யட்டும்?
தெய்வமே, எங்கிருக்கிறாய்?

Labels:

Wednesday, April 18, 2007

கறை

அவலக்குரல் காதில் வாங்காமல்
நகர்ந்தோடும்
காலம் உண்டு உமிழ்ந்து போகும்
வரலாற்றில் ஒரு துகளாய் நாம்


விழுகின்ற மழைக்கும் கழுவி(வி)ட முடிவதில்லை
சிந்தப்பட்ட எம் குருதியை.
குளங் கட்டி வைப்போம் குருதி சேர்ப்பதற்கு
தேவையானவர்கள் அள்ளித் தாகம் தீர்க்க
இனிமேலும், கேளாமல்
கொட்டுகின்ற சிவப்புத் திரவம்
அள்ளியெடு, சிலவேளை வந்த வழி திருப்பியனுப்பலாம்
இல்லையெனின், அவர்கள் வயலுக்கு எம் குளம் கொண்டு
ஏற்றமிறைக்கட்டும்,
சிவப்பரிசி நன்கு விளையும்.

வரலாற்றுத்துணி சரசரக்க இழுத்தெடு,
கால நீரோட்டத்தில் கறைகள் கழுவலாம்.

Labels:

Tuesday, February 13, 2007

03. அப்பா

அகாலமாய் மறைந்த பதிவர் சாகரனுக்கு முதற்கண் அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

--------------------------------------------------------------------------------
ஆட்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். மூலையில் உட்கார்ந்திருந்தான் குட்டி தருண். இறுக்கிப்பிடித்துக் கொண்டு அழுத அம்மாவிடமிருந்து திமிறிக் கொண்டு விலகி வந்திருந்தான். பிரியமான 'ட்ரக்'கின் சக்கரங்களை கைகள் உருட்ட அம்மாவைப் பார்த்தான். அவனுக்கும் அழுகையாக வந்தது. ஒரு நாளும் அழாத அம்மா. சிரித்த முகத்தோடே செல்லம் கொஞ்சும் அம்மா இன்றைக்கு வழியும் கண்ணீரைத் துடைக்காமலே உட்கார்ந்திருந்தார். நான் அழுதா மட்டும் 'நீ என்ன பேபியா, நல்ல பிள்ளைதான" என்று ஆறுதல் சொல்லும் அம்மாவே அழுதால்..

அப்பாவைத்தான் இன்னும் காணோம். அப்பா இல்லாமல் தூங்கி, இன்றைக்குத் திரும்ப சூரியன் பார்க்க எழுந்தும் விட்டாச்சு. ஸேவியர் மாமா ஓடியோடி என்னென்னவோ வேலை செய்து கொண்டிருக்கிறார். வீட்டே வந்தால் அவனுடனே உட்கார்ந்து விளையாடுபவர் இன்றைக்கு அவன் தலையைத் தடவினதோடே சரி. பம்பரமாய்ச் சுழல்கிறார். ஐயோ அப்பா.. சீக்கிரம் வந்து அம்மாவை அழ வேண்டாமென்று சொல்லுங்களேன். நிறைய ஆட்கள் வந்து போவதும் வீட்டை நிறைப்பதும் அவனுக்கு மூச்சு முட்டிற்று. அவனைக் கை காட்டிப் பேசுவதையும் கண்டானே தவிர ஒன்றும் புரியவில்லை. எழுந்து தோட்டத்துக்குள்ளே போய் அவனுக்குப் பிடித்த மரத்தின் கீழே படுத்துக் கொண்டான்.எவ்வளவு நேரமாயிற்றோ தெரியவில்லை.. தூங்கிப் போன தருணை அம்மா உரத்து அழும் சத்தம் எழுப்பிற்று. அவசர அவசரமாய்க் உள்ளே வந்து பார்த்தவன் அப்பா வீட்டே வந்ததுக்கு அம்மா ஏன் அழுகிறார் என்று யோசித்தான். அப்பா படுத்தே இருந்தார். "எதற்கு நடுக்கூடத்தில் படுக்கை? அறைக்குள் கட்டிலில் படுத்தால் வரும்-போகும் ஆட்களின் தொல்லை இராதே. நல்ல தூக்கம் போல அதுதான் எழும்பி அறைக்குள் போகவில்லை" என்று எண்ணிக் கொண்டான். கண்
விழித்ததுமே எதற்கு இத்தனை மாலைகள், ஆட்கள் என்று அப்பா முழிக்கக்கூடும் என்று நினைத்தான்.. மெல்ல ஒரு புன்னகை விரிந்தது அவன் முகத்தில்.

அவன் முறுவலைக் கவனித்த ஒரே ஆள் மர்சூக். "என்ன மகன், எனக்கும் சொல்லுங்களேன்" என்று சிறு கை பிடித்துக் கேட்டபடியே அவன் பக்கத்தில் மண்டியிட்டார்.
"இல்ல மாமா, அப்ப எழுந்ததுமே இவ்வ்ளோ பேர் இருக்கறதப் பாத்து அம்மாக்கு நாங்க வைச்சா மாதிரி தனக்கும் சேர்ப்பிறைஸ் பார்ட்டின்னு நினைப்பார் .. அதுக்குத்தான் இவ்ளோ மாலைன்னும் தொட்டுப் பாப்பாங்க. அதான்"

மர்சூக்கிற்கு தொண்டை அடைத்தது, இந்தப் பிஞ்சிற்கு எப்படிச் சொல்வது அப்பா இனி எழ மாட்டானென்று?
"தருண், அப்பா எழ மாட்டாங்க இனிமே"
"ஏன் மாமா?"
".. சாமிகிட்டப் போயிட்டாங்க"
"எப்ப வருவாங்க?"
"...."
"சாயங்காலம் க்ரிக்கெட் அடிக்க? பந்து விளாட? படம் வரைய?"
"வரவே மாட்டாங்கப்பா"
"எதுக்குப் போனாங்க"
"சாமி கூப்பிட்டாங்க..சாமிக்கு அப்பா கூடப் பேசணுமாம்"
"குழப்படி செய்ஞ்சா என்னைய மிஸ் நீனா கூப்பிடுவாங்களே.. அப்பிடிப் பேசவா"
"ஆமா.."
"அப்பா குழப்படி செய்யலையே? goodboy தானே. எதுக்குக் கூப்பிடணும்"
"நீங்க அழகா படம் வரைஞ்சா, புத்தகம் ஷேர் பண்ணினா இல்லாட்டி உங்க நண்பர்களுக்கு உதவி செய்ஞ்சா ப்ளே ஸ்கூல்ல மிஸ் நீனா உங்கள அழைச்சிப் பேசுவாங்கதானே"
"ஆமா.. நேத்தும் கவி கீழ விழுந்து காலைத் தேச்சுட்டு அழுதப்ப நான் ஒரு ப்ளாஸ்டர் கொடுத்தேன்.. அப்ப என்னை goodboy சொல்றதுக்கு மிஸ் நீனா அழைச்சாங்க"
"நல்ல பிள்ளையா இருக்கீங்க. அப்பாவும் அப்பிடி goodboyதானே.. அதான் சாமிக்கு பேசணும்னு ஆசை வந்து அழைச்சிருக்கார்"
"அப்ப எனக்கு அப்பாவைப் பாக்கணுமே"
"அதுக்கு நேரம் வரணும்"
"எப்ப நேரம் வரும், நானும் சாமிக்கிட்டே போறேன், அப்பாவப் பார்க்கணும்"
"தருண் குட்டி, உங்களுக்கு சாப்பிட ஒரு நேரம் தூங்குறதுக்கு ஒரு நேரம் விளாட வேற நெரம்னு இருக்குதா?
"ம்ம்"
"தூங்கற நேரத்துல சாப்பிடுவீங்களா? விளாடுற நேரத்துல தூங்குவீங்களா?"
மனதை அள்ளும் 'க்ளுக்' சிரிப்பு. "இல்ல"
"அதே மாதிரி சாமியப் போய்ப் பார்க்கவும் நேரம் இருக்கு. மிஸ் நீனா எப்ப அழைப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதுல்லே.. அப்பிடித்தான் சாமியும் அழைப்பாங்க"
"எல்லாரையும் அழைப்பாங்களா?"
"ஆமா செல்லம், எல்ல்ல்ல்லாரையும் அழைப்பாங்க. எப்போன்னுதான் தெரியாது. அது வரைக்கும் நாமா நல்லா புள்ளையா இருந்து நல்லாப் படிச்சு எல்லாருக்கும் உதவி செய்ஞ்சு ஒத்துமையா இருக்கணும். புள்ள கூட விளாட படம் வரைய அம்மா இருக்காங்க. அம்மாக்கூட சேர்த்து உங்களோட இதெல்லாம் செய்ய மாமாவும் அமீரா ஆன்ட்டி ஸேவியர் மாமா ஆஷா ஆன்டியும் கவி, கலைமதியும் முடிஞ்சப்ப வருவோம்." சொல்லிக் கொண்டே தருணை அனைத்துக் கொண்டார். தருணின் கைகள் ட்ரக்கின் சக்கரத்தை இன்னும் சுழற்றிக் கொண்டிருந்தன.

Labels:

Thursday, December 21, 2006

அழைப்பும் நானும்

[நிழல் தரும் கரையோரத்துப் பெருமரங்கள்
முதலை விட இப்போது கிழடுதட்டி
முன்னிருந்த அழகில்லாதது போலத் தெரிவதேன்?
என் கண்களுக்கென்ன நடந்தது,
முன்பு பெரிதாயும், அழகானதாயும்
பெருமைக்குரியதாயும் இருந்த என் சூழல்
குறுகின பார்வையால்
மாசுபட்டதேன்?]

ஒரு நதி அழைக்கிறது - வா
மீண்டும் விளையாடவென்று.
நினையாமல் குதித்து,
அதன் மடியில் கும்மாளமிட்ட நாட்களையெண்ணி
மீண்டும் வராதா என
என்னைப் போலவே அதுவும் ஏங்கியிருக்கலாம்
நினைத்ததும் குதிப்பதற்கு
இப்போது முடிவதில்லை.
சிறு கூழாங்கல்லெடுத்து சளக்கென்று சத்தம் வர
நாலைந்து தெறிப்பிற்கு எறிய இயல்வதில்லை,
வளைந்து சுழிக்கிற நதியின்
சுதந்திர இயல்பும் சாவகாசமும் என் கட்டுக்களும்
மட்டுமே கண்ணில் படுகின்றன.

ஒளிந்திருந்து கீச்சங் காட்டும் சிறு மீன்கள்
வளர்ந்திருக்கக்கூடும்,
என்னைப் போலவே.
அவைகட்கும் ஊர் பார்க்கும் ஆவலிருக்குமா
இல்லை உணவதிகமென்று நுளம்பு முட்டை நிறைந்த
குட்டையொன்றில் வாசஞ் செய்யுமா?

ஆறு விடாமல் அழைக்கிறது,
குதிக்கிற ஆசைக்குக் கடிவாளம் போட்டு
தொடர்ந்து நடக்கிறேன்.. நாகரிகச் செவிடி நான்.

Labels: