Tuesday, February 13, 2007

03. அப்பா

அகாலமாய் மறைந்த பதிவர் சாகரனுக்கு முதற்கண் அஞ்சலி. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

--------------------------------------------------------------------------------
ஆட்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். மூலையில் உட்கார்ந்திருந்தான் குட்டி தருண். இறுக்கிப்பிடித்துக் கொண்டு அழுத அம்மாவிடமிருந்து திமிறிக் கொண்டு விலகி வந்திருந்தான். பிரியமான 'ட்ரக்'கின் சக்கரங்களை கைகள் உருட்ட அம்மாவைப் பார்த்தான். அவனுக்கும் அழுகையாக வந்தது. ஒரு நாளும் அழாத அம்மா. சிரித்த முகத்தோடே செல்லம் கொஞ்சும் அம்மா இன்றைக்கு வழியும் கண்ணீரைத் துடைக்காமலே உட்கார்ந்திருந்தார். நான் அழுதா மட்டும் 'நீ என்ன பேபியா, நல்ல பிள்ளைதான" என்று ஆறுதல் சொல்லும் அம்மாவே அழுதால்..

அப்பாவைத்தான் இன்னும் காணோம். அப்பா இல்லாமல் தூங்கி, இன்றைக்குத் திரும்ப சூரியன் பார்க்க எழுந்தும் விட்டாச்சு. ஸேவியர் மாமா ஓடியோடி என்னென்னவோ வேலை செய்து கொண்டிருக்கிறார். வீட்டே வந்தால் அவனுடனே உட்கார்ந்து விளையாடுபவர் இன்றைக்கு அவன் தலையைத் தடவினதோடே சரி. பம்பரமாய்ச் சுழல்கிறார். ஐயோ அப்பா.. சீக்கிரம் வந்து அம்மாவை அழ வேண்டாமென்று சொல்லுங்களேன். நிறைய ஆட்கள் வந்து போவதும் வீட்டை நிறைப்பதும் அவனுக்கு மூச்சு முட்டிற்று. அவனைக் கை காட்டிப் பேசுவதையும் கண்டானே தவிர ஒன்றும் புரியவில்லை. எழுந்து தோட்டத்துக்குள்ளே போய் அவனுக்குப் பிடித்த மரத்தின் கீழே படுத்துக் கொண்டான்.எவ்வளவு நேரமாயிற்றோ தெரியவில்லை.. தூங்கிப் போன தருணை அம்மா உரத்து அழும் சத்தம் எழுப்பிற்று. அவசர அவசரமாய்க் உள்ளே வந்து பார்த்தவன் அப்பா வீட்டே வந்ததுக்கு அம்மா ஏன் அழுகிறார் என்று யோசித்தான். அப்பா படுத்தே இருந்தார். "எதற்கு நடுக்கூடத்தில் படுக்கை? அறைக்குள் கட்டிலில் படுத்தால் வரும்-போகும் ஆட்களின் தொல்லை இராதே. நல்ல தூக்கம் போல அதுதான் எழும்பி அறைக்குள் போகவில்லை" என்று எண்ணிக் கொண்டான். கண்
விழித்ததுமே எதற்கு இத்தனை மாலைகள், ஆட்கள் என்று அப்பா முழிக்கக்கூடும் என்று நினைத்தான்.. மெல்ல ஒரு புன்னகை விரிந்தது அவன் முகத்தில்.

அவன் முறுவலைக் கவனித்த ஒரே ஆள் மர்சூக். "என்ன மகன், எனக்கும் சொல்லுங்களேன்" என்று சிறு கை பிடித்துக் கேட்டபடியே அவன் பக்கத்தில் மண்டியிட்டார்.
"இல்ல மாமா, அப்ப எழுந்ததுமே இவ்வ்ளோ பேர் இருக்கறதப் பாத்து அம்மாக்கு நாங்க வைச்சா மாதிரி தனக்கும் சேர்ப்பிறைஸ் பார்ட்டின்னு நினைப்பார் .. அதுக்குத்தான் இவ்ளோ மாலைன்னும் தொட்டுப் பாப்பாங்க. அதான்"

மர்சூக்கிற்கு தொண்டை அடைத்தது, இந்தப் பிஞ்சிற்கு எப்படிச் சொல்வது அப்பா இனி எழ மாட்டானென்று?
"தருண், அப்பா எழ மாட்டாங்க இனிமே"
"ஏன் மாமா?"
".. சாமிகிட்டப் போயிட்டாங்க"
"எப்ப வருவாங்க?"
"...."
"சாயங்காலம் க்ரிக்கெட் அடிக்க? பந்து விளாட? படம் வரைய?"
"வரவே மாட்டாங்கப்பா"
"எதுக்குப் போனாங்க"
"சாமி கூப்பிட்டாங்க..சாமிக்கு அப்பா கூடப் பேசணுமாம்"
"குழப்படி செய்ஞ்சா என்னைய மிஸ் நீனா கூப்பிடுவாங்களே.. அப்பிடிப் பேசவா"
"ஆமா.."
"அப்பா குழப்படி செய்யலையே? goodboy தானே. எதுக்குக் கூப்பிடணும்"
"நீங்க அழகா படம் வரைஞ்சா, புத்தகம் ஷேர் பண்ணினா இல்லாட்டி உங்க நண்பர்களுக்கு உதவி செய்ஞ்சா ப்ளே ஸ்கூல்ல மிஸ் நீனா உங்கள அழைச்சிப் பேசுவாங்கதானே"
"ஆமா.. நேத்தும் கவி கீழ விழுந்து காலைத் தேச்சுட்டு அழுதப்ப நான் ஒரு ப்ளாஸ்டர் கொடுத்தேன்.. அப்ப என்னை goodboy சொல்றதுக்கு மிஸ் நீனா அழைச்சாங்க"
"நல்ல பிள்ளையா இருக்கீங்க. அப்பாவும் அப்பிடி goodboyதானே.. அதான் சாமிக்கு பேசணும்னு ஆசை வந்து அழைச்சிருக்கார்"
"அப்ப எனக்கு அப்பாவைப் பாக்கணுமே"
"அதுக்கு நேரம் வரணும்"
"எப்ப நேரம் வரும், நானும் சாமிக்கிட்டே போறேன், அப்பாவப் பார்க்கணும்"
"தருண் குட்டி, உங்களுக்கு சாப்பிட ஒரு நேரம் தூங்குறதுக்கு ஒரு நேரம் விளாட வேற நெரம்னு இருக்குதா?
"ம்ம்"
"தூங்கற நேரத்துல சாப்பிடுவீங்களா? விளாடுற நேரத்துல தூங்குவீங்களா?"
மனதை அள்ளும் 'க்ளுக்' சிரிப்பு. "இல்ல"
"அதே மாதிரி சாமியப் போய்ப் பார்க்கவும் நேரம் இருக்கு. மிஸ் நீனா எப்ப அழைப்பாங்கன்னு உங்களுக்குத் தெரியாதுல்லே.. அப்பிடித்தான் சாமியும் அழைப்பாங்க"
"எல்லாரையும் அழைப்பாங்களா?"
"ஆமா செல்லம், எல்ல்ல்ல்லாரையும் அழைப்பாங்க. எப்போன்னுதான் தெரியாது. அது வரைக்கும் நாமா நல்லா புள்ளையா இருந்து நல்லாப் படிச்சு எல்லாருக்கும் உதவி செய்ஞ்சு ஒத்துமையா இருக்கணும். புள்ள கூட விளாட படம் வரைய அம்மா இருக்காங்க. அம்மாக்கூட சேர்த்து உங்களோட இதெல்லாம் செய்ய மாமாவும் அமீரா ஆன்ட்டி ஸேவியர் மாமா ஆஷா ஆன்டியும் கவி, கலைமதியும் முடிஞ்சப்ப வருவோம்." சொல்லிக் கொண்டே தருணை அனைத்துக் கொண்டார். தருணின் கைகள் ட்ரக்கின் சக்கரத்தை இன்னும் சுழற்றிக் கொண்டிருந்தன.

Labels: