Thursday, October 05, 2006

வானத்துக் கண்

நீள்கின்ற நாட்கள்
அதிகமான வெளிச்சம்
நாள் இருபுறமும் இழுபடுகையில்
கடத்தப்பட்டு வரும் இருப்பின் நிகழ்வுகள்

விழப்போகும் முதல் இலைக்காய்
காத்திருக்கவேண்டி
காண்பவையெல்லாம் போர்த்திவிட
குறுகும் நாட்கள் இங்கே வரும்.
ஆனாலும் அதுவரை,
ரயிலேறி, பொருந்தாமல்
சங்கடப்படுத்தும் மணம்வீசும் கிழவரை
காணாததுபோல புத்தகத்துள்
மூழ்கிக்கொண்ட என்னை
விரிந்திருக்கும் வானம் பார்த்திருக்குமா?

காண்கின்ற போரும்
காணாமலே வதைக்கும் பசியும்
பேச்சின் குரூரமும்
பேசாத வன்மமும்
இயல்புகள் சூடாகி
தணிக்க நீரின்றி
காண்கிற தரையெங்கும்
பசுமையினதும் வாழ்வினதும் சடலங்கள்

வானத்துக்குக்
கண்கள் மூடிக்கொள்ளத் தோன்றும் வேளையில்
இல்லாத இமைகளாய்
பிரபஞ்சப் பயணி கொட்டிப் போகும்
விண்வெளிக் குப்பைகள் உதவக்கூடும்.

Labels: