Thursday, December 21, 2006

அழைப்பும் நானும்

[நிழல் தரும் கரையோரத்துப் பெருமரங்கள்
முதலை விட இப்போது கிழடுதட்டி
முன்னிருந்த அழகில்லாதது போலத் தெரிவதேன்?
என் கண்களுக்கென்ன நடந்தது,
முன்பு பெரிதாயும், அழகானதாயும்
பெருமைக்குரியதாயும் இருந்த என் சூழல்
குறுகின பார்வையால்
மாசுபட்டதேன்?]

ஒரு நதி அழைக்கிறது - வா
மீண்டும் விளையாடவென்று.
நினையாமல் குதித்து,
அதன் மடியில் கும்மாளமிட்ட நாட்களையெண்ணி
மீண்டும் வராதா என
என்னைப் போலவே அதுவும் ஏங்கியிருக்கலாம்
நினைத்ததும் குதிப்பதற்கு
இப்போது முடிவதில்லை.
சிறு கூழாங்கல்லெடுத்து சளக்கென்று சத்தம் வர
நாலைந்து தெறிப்பிற்கு எறிய இயல்வதில்லை,
வளைந்து சுழிக்கிற நதியின்
சுதந்திர இயல்பும் சாவகாசமும் என் கட்டுக்களும்
மட்டுமே கண்ணில் படுகின்றன.

ஒளிந்திருந்து கீச்சங் காட்டும் சிறு மீன்கள்
வளர்ந்திருக்கக்கூடும்,
என்னைப் போலவே.
அவைகட்கும் ஊர் பார்க்கும் ஆவலிருக்குமா
இல்லை உணவதிகமென்று நுளம்பு முட்டை நிறைந்த
குட்டையொன்றில் வாசஞ் செய்யுமா?

ஆறு விடாமல் அழைக்கிறது,
குதிக்கிற ஆசைக்குக் கடிவாளம் போட்டு
தொடர்ந்து நடக்கிறேன்.. நாகரிகச் செவிடி நான்.

Labels:

0 உங்கள் கருத்து:

Post a Comment

<< Home