Thursday, May 17, 2007

ஒரு நடிகனின் கேள்வி

என்னை இன்னுமின்னும் வருத்தாதே..
இதற்கு மேலும் ஓங்கியடிப்பேன்
அதன்பின் என்னைப் பிடிக்காமல் போயிருக்கிற
உனக்கும்,
உன்னைப் பிடிக்காமல் போயிருக்கிற
எனக்கும்
இன்னும் நீண்டு போகும் பொழுதுகள்.

இரத்தமில்லாப் போரின் சாட்சியமாய்
வீடெங்கும் இறைந்து கிடக்கும்
சொல்லடிகள்
பொறுக்கிக் கொள்ளும் இளந்தளிர்
தூவியது எமக்கு மறந்து போன பொழுதொன்றில்
கணநேர எரிச்சலில்
அன்பான சகோதரத்துக்கு
சேகரித்த சொல்லால் அடித்து விடுவது கண்டு
திகைத்திருப்போம்
எங்கே பொறுக்கியிருக்கக் கூடும் என்று.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதாம்
காதலாகிக் கசந்து
அதன் பின்னே கண்ணீர் மல்குவதை
யாரிடம் போய்ச் சொல்வோம்?
சிறுதளிருக்காய் பார்த்து நிற்கிற போதில்
வலுவிழந்து போகும் வாழ்க்கைக்கு
என்ன முடிவென்று கொள்ள?

உனக்கும் எனக்குமான நம் பொழுதுகள்
இப்போதெல்லாம் கனவிலேயே
வீடென்ற ஞாபகம் தரும்
கசப்பு நிறையும் நாட்களும்
பதைபதைப்பாய் நகரும் வார இறுதியும்
சொல்லும் கதையை
வெளிப்பார்வைக்குத் தெரியாமல்
மற்றவர்களுக்குப் பயந்து நீ
காட்டிச் செல்லும் நாடகத்தின்
கால அளவென்ன - அவசரமாய்த் தெரிய வேண்டும்
அரிதாரம் மூச்சு முட்டுகிறது.

என்னை இன்னுமின்னும் வருத்தாதே..
மூட முடியாத கொதிக்கின்ற உலையும்
ஊர்வாயும்போலத்தான்
வாழத் தவிக்கும் என் அவாவும்
நம் விடுதலை எந்தப்பக்கம்?

Labels:

காணாத உன்னைத் தேடி



{{image source: www.eamel.net/images/crying-baby.jpg }}

சொன்னது கேட்டேன்
அதன் படியே வந்திருக்கிறேன்.
தேடுகிறேன், உன்னைக் காணவில்லை
வசிப்பிடங்கள் இத்தனையா உனக்கு?
அதிலும் சொத்துப் பிரிக்க எத்தனைபேர்
பிடிக்காமல் ஓடிவிட்டிருக்கக் கூடும் நீ
புரிகிறது எனக்கு,
ஆனாலும் அழுகின்ற உள்ளங்கள் என்ன செய்யட்டும்?
தெய்வமே, எங்கிருக்கிறாய்?

Labels: