Wednesday, August 02, 2006

விழிப்பு

சின்னச்சின்ன சதுரத் துவாரங்களூடாகத்தான் அவன் முகத்தைப் பார்க்கலாம். ஒவ்வொருநாளும் இரவு எல்லாரும் தூங்கின பிறகு சமையலறைக்கும் தெருவுக்கும் இருந்த ஒரே தொடர்பான அந்த யன்னலென்று சொல்ல முடியாத காற்று வரப்போக அமைத்ததினருகில் சந்திப்பு நிகழும். தண்ணீர் குடிக்க வந்த அம்மாவிடம் மாட்டிக்கொண்ட நாளிலிருந்து அதுவுமில்லை. பதினைந்து வயசுக்கு இதெல்லாம் வேண்டாத விடயமென்று சொன்ன அம்மாவின் பேச்சுக் கசந்தது. எல்லாம் விட்டாயிற்று என்று பொய் சொல்ல வைத்தது.

பின்னேரம் விளையாடும்போது தூரத்தில் நண்பர்களோடு நிற்பவனைக் கண்டு கொள்ள வேண்டியதுதான். கடிதப் போக்குவரத்து மட்டும் பழுதில்லாமல் தோழி புண்ணியத்தில் நடக்கும். வகுப்புக்குப் போய் வருகிற வழியில் தெருவின் ஒதுக்குப் புறத்தில் மதிலுக்குப் பின்னால் சந்தித்துப் பேசியதும் பரிமாறிக் கொண்ட முத்தங்களும் பற்றித் தோழிக்குச் சொல்கையில் முகம் சிவந்து போகும். தோழியின் அறிவுரையும் கேட்கப் பிடிக்காது, அதனால் அவளும் இப்போது ஒன்றும் சொல்வதில்லை.

சிறப்புப் பூசைக்காக சன நெரிசலையும் பொருட்படுத்தாமல் பரஸ்பரம் பார்த்துப் பேசிக்கொள்ள கோயிலுக்கு வந்திருந்தார்கள். அவள் நின்றதிலிருந்து நாலைந்து அடியும் நாற்பது பேரும் தள்ளி அவன். இவள் பின்னால் நின்றிருந்த விடலைகள். தலைமயிர் இழுத்து விசமம் பண்ணுகிறார்கள். கண்ணாலேயே சொல்கிறாள். அவனும் தன்னிடம் வருமாறு சொல்லி அழைத்துக் கொள்கிறான். அவளுக்குப் பெருமையாக இருக்கிறது. வகுப்புகளுக்குப் போகையிலும் சற்று இடைவெளி விட்டுத் தொடர்வான். அவளுக்கும் தெரியும். அவன் வேலை பார்க்கும் கடை தாண்டிப் போகையில் அவனைத் தேடுவது போலே பொய்யாய் பார்ப்பாள்.

இப்படியே ஒரு வருடம் உருண்டோடுகிறது. அம்மாவுக்கும் நம்பிக்கை திரும்பிவிட்டது. வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு ஒருநாள் அவனோடு போகிறாள். அறையெடுத்து அங்கே இரு மணி நேரம். பாரதூரமாய் ஒன்றும் நடக்கவில்லை.. ஆனாலும் சின்னச் சின்ன சில்மிசங்கள். உடைகள் பரிசுப்பொருட்கள் என்று நிறையக் கொடுத்தான். எல்லாவற்றையும் கொண்டு போய்த் தாயிடம் மாட்ட விரும்பாமல் உடைகளில் இரண்டை மட்டும் தன் ஆடைப்பைத்தியம் பற்றித் தெரிந்த தாயை ஏய்க்க எடுத்துக் கொள்கிறாள். அந்த அம்மாவும் அப்படியே நம்புகின்றார். இரவிரவாய்த் தூக்கமில்லை இவளுக்கு. "உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறேன்" என்று சொன்னது தான் காதில் கேட்கிறது.

மறுவாரம் பள்ளிக்கூடத்தால் வந்தவளுக்கு தாயின் அழுத முகம் புரியவில்லை. எத்தனை சொன்னாலும் கேட்கவில்லையே என்று அம்மா தலையிலடித்துக் கொண்டார். அவன், தனது தமக்கையோடு வந்து பெண் கேட்டுப் போனானாமே..

"என்ன சொன்னீர்கள்?"
"படிக்கிற பிள்ளையை கல்யாணம் கேட்டா வேறென்னத்தைச் சொல்ல! இல்லையென்றுதான்"

ஒன்றும் பேசாது உள்ளே போனாள். குளிக்கப் போவது போலப் பாசாங்கு பண்ணி குளியலறையிலிருந்து "திருமணமானதும் தொடர்ந்து என்னைப் படிக்க விடுவாயா ?" என்று கேட்டு அவசர அவசரமாய்க் கடிதமெழுதினாள். அதனைக் கொடுக்க அவசியமின்றி, "அம்மா மாட்டேனென்கிறார், ஆனால் கவலைப்படாதே இன்னொரு தடவை பேசிப்பார்க்கிறேன். இப்போது திருமணமல்ல, உன் படிப்பின் பிறகே" என்று இவளுக்குக் கடிதம் வந்தது..

இரண்டு நாளில் மீண்டும் அழுதபடி அம்மா. அப்பாவுக்கு எக்கணமும் தொலைபேசி எடுத்துச் சொல்லிவிடுவா போல இருந்தது. இவள் பயந்தாள். தோழி தந்ததை அவசர அவசரமாய் பிரித்து அவன் கையெத்தில் படிக்கின்றாள்.
"அம்மா திரும்பவும் மாட்டேனென்கிறார். உன் அப்பா எப்போது விடுமுறையில் வருவார்? அவரைக் கேட்கும் வரை என்க்குப் பொறுமை இல்லை. அவரும் இல்லை என்று சொன்னால் என்னால் தாங்க முடியாது. அதனால் அம்மாவைச் சம்மதிக்க வைக்க நாம் மாந்திரீகம் செய்து கொள்ளலாம்" . .

மாந்திரீகத்துக்கு விளக்கம் கேட்டு அனுப்பினாள். அம்மாவினது காலடி மண் ஒரு பிடி எடுத்துக் கொடுத்தால் போதுமாம். இவன் மாந்திரீகனிடம் வாங்கி வருவதை வீட்டில் வைத்தால் அம்மா இவன் கேட்பது எதற்கும் சம்மதிப்பார்களாம். இவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பயத்துக்கும் மேலாக அப்போது தான் அறிவு விழித்தது. என்ன காரியம் செய்ய இருக்கிறான்.. சீ!

இவனெங்கே.. என் நன்மை பற்றி மட்டுமே எண்ணம் கொண்ட என் அன்னை எங்கே!! என்ன அன்பான குடும்பம்.. இவர்களை அன்பால் வெல்வதை விட்டு இப்படிக் கீழ்த்தரமான வழியில் இறங்குவதா? இப்படிப்பட்டவன் தன் தேவைக்கு என்னை என்னவும் செய்வானே? பலவாறாக யோசித்தாள். தெளிவான மனதுடன் அடுத்த நாள் அவனைச் சந்தித்து உன் சகவாசம் வேண்டாமென்று முறித்துக் கொண்டு வீடு வந்தாள். தாய்மடி இவள் கண்ணீரால் நனைந்தது.

அப்பாவுக்குத் தெரியவராமலே அம்மாவும் மகளுமாய் அவனால் வாரியிறைக்கப்பட்ட சேற்றைத் துடைத்தெறி
ந்தனர். வேறு சலனங்களின்றி, தன் வாழ்வின் முன்னேற்றமே குறிக்கோளாய் வளர்ந்தாள்.

குறிப்பு: உண்மைச்சம்பவம்.

Labels: