Tuesday, July 18, 2006

இருப்புக் கோடு

இருக்கும் வரை இருந்து கொள்வோம்
இல்லாது போகிற கணங்களில்
நினைவுகள் வாழும்.
அவை வாழ்கின்ற காலமளவும்
நாமும் வாழ்ந்து கொள்வோம்.

மரணித்துக் கொள்வோம்
மரணமுள்ள வரை மட்டுமே அது முடியும்.

இருந்து கொள்வதும் இல்லாது போவதும்
ஒற்றைக்கோட்டின் இருபுறமாய்
எட்டிப்பிடிக்க கோட்டுக்கப்பால்
கைகள் நீளுமந்த நாளில்
ஒளியொன்று தெரியுமாம்..
இருக்கும் வரை தெரியாத ஒளி
அற்றுப் போனதின் பிற்பாடு
கோட்டுக்கப்பால் நின்றழைக்கும்.

சேணமும் கடிவாளமும் மாட்டியும்
அடங்க மறுத்துத் திமிறியோட எத்தனிக்கும்
இருப்பு - பனியாய்க் கரைந்துருகும்.
கோடு தாண்டிப் போன பின்னால்
சுயமே சுயமற்றுத் தனித்ததொரு புள்ளியாய்
அலையவும் கலையவும்

கனவுகள் வந்து சங்கமித்து
இசைகேடாய் என்னிருப்பு ஆகமுன்னம்
இன்மையறிய வேண்டுமெனக்கு..
எனக்கான கோட்டைக் கீறிப் போக
மனவெளியே பெருவெளியே வா!

Labels: