Monday, September 25, 2006

இரவு

நீண்டு தொலைகின்ற நிழல்கள்
சிலவேளை மீளக் கூடும்..
என்னில் நீ கொண்டுள்ள ஆசையைப் போல

இருளின் உயிர்களும் அவற்றின் முகங்களும்
இல்லாத வெளிச்சத்துக்கு வர
காலிடையே புகுந்தோடும்
எச்சங்கள் நோக்கி ஒரு பெருச்சாளி

வெம்மைகள் உண்டாயினும்
அழகாயிராதென்ற கற்பித்தலால் அடக்கும் பெண்ணுக்கு
வேண்டாமென்கிற தருணத்தில்
துழாவும் கரங்களிரண்டிற்கு இசையவேண்டி
சலனமற்று அடங்கும் உடல் மட்டும்.
தூரத்து ஊளையாய் மனம் கூச்சலிடும்

புரண்டு படுத்த ஒருநொடியில்
அழகிய பூக்குழந்தை அழகுமுகம் தொலைத்து
தா தாவென்று உறிஞ்சத் தொடங்கையில்
ஒற்றைநிலவும் வேட்டைக்காரன் நட்சத்திரங்களும்
வெட்கத்தில் ஒளிந்தோடும்.

உதிரப்போகின்ற கொத்துப்பூக்களும்
இப்படித்தான் நிலையாமல் யோசித்தால்
அன்றைக்கு வந்து மகரந்தம் தூக்கின
தேனீக்காய் இன்னும் சில மணிநேரம்
காத்திருக்கக் கூடும்.

உனக்கும் எனக்குமான வலிகள்
அவரவர் கற்பிதங்களுடன்
அவரவர் எடை நிறுத்தல்களில்.
விடிகின்ற வரை மட்டும்
ஞாபகம் இருக்கட்டும்
அடுத்து நினைக்கும் வரை மறந்து போவோம்

இன்னுமொரு இரவு கட்டாயம் இன்றைக்கு வரும்.

Labels: