Wednesday, October 04, 2006

2. தெளிவு

சிவலிங்கத்தாருக்குக் கோவங் கோவமாய் வந்தது. "என்ட பிள்ளையிட சீவியத்தில எனக்கில்லாத அக்கறை இவருக்கேன்". தரகர் குமரகுருவை நினைத்து மனிசியிடம் ஏறி விழுந்தார்.

சந்திராவுக்கு, ஊரார் கதைக்கத் தொடங்க முன்னம் மகளுக்குக் கலியாணஞ் செய்து வைக்க வேண்டுமென்ற அவசரம். ஒழுங்கையால் போன தரகரைப் பிடிச்சு மாப்பிள்ளை பார்க்கச் சொன்னது சந்திராதான். சிவலிங்கத்தாரிட்ட அதைச் சொல்லப் பயம்.

நிர்மலாக்கு இருவத்தொரு வயசு நடக்குது. என்னவோ உயர்தரச் சோதினையில நல்ல ரிசல்ற் வந்தும் கம்பஸ் கிடைக்கல்ல. திருப்பிச் சோதினை எடுக்க வேண்டாமெண்டு ஜிசிஏயோ என்னத்தையோ கொப்பர் படிக்க வைச்சிருக்கிறார். கலியாணங் கட்டி குடும்பம் நடத்தப்போறவளுக்கு என்னத்துக்கு இந்தப் படிப்பெல்லாம்? அந்த வகுப்புக்கு பெடியன்களும் வாறது.. இளந்தாரிக்கூத்துகள் தொடங்கிரக் கூடும். நிப்பாட்டுவமெண்டா இல்ல சுயமாத் தன்ட காலில் நிக்கோணும் எண்டு மகளும் அதுக்கு ஒத்தூதிக் கொண்டு அப்பாவும். கலியாணங் கட்டினா பிறகென்னத்தை? வீட்டைப்பாக்க பிள்ளையைப் பாக்கச் சரி. பதினெட்டு முடிந்த கையோடவே மூத்தவளை இவங்கட ஆட்டத்துக்கு விடாமல், பிடிவாதமாய் நின்று கட்டிக் கொடுத்தனாந்தானே.. இதுவும் நடத்தீடலாம். இப்படியெல்லாம் பலவாறாக சந்திராவின் மனம் எண்ணமிட்டது.

இரவு. வேலைகளெல்லாம் முடித்துக் கையைத் துடைத்த படியே முற்றத்துக்கு வந்த சந்திராவுக்கு சிவலிங்கத்தாரைக் கண்ணில் படவில்லை.

"நிர்மலா..அப்பா எங்க?"

"இப்பத்தான் அவசரமா முத்துமாமாட சின்னவன் வந்து கூப்பிட, போறார். கோல் வந்தெண்டுதான் கேட்டது. ஆர்ரண்டு தெரியாது."

மலர்ந்திருந்த பவளமல்லிகையின் நறுமணம் மிகவும் இனிதாயிருந்தது. அனுபவித்தது நிர்மலா மட்டுமே.. அழைத்தது யாராயிருக்கும் என்கிற யோசனையில் தொலைந்து போயிருந்தார் சந்திரா.

அரைமணி கழித்துத் திரும்பின சிவலிங்கத்தார் பலத்த யோசனைவயப்பட்டவராய் இருந்தார்.

"என்னப்பா? ஆர் எடுத்தது?"

"சகுந்தலா"

"என்னக் கூப்பிடேல்ல நீங்க, பிள்ளையையோட கதைச்சுக் கனகாலம். தபாலும் இப்ப குறைஞ்சிட்டுது." குடும்பம்/பிள்ளைகள் என்று வந்துவிட்டால் இது சாதாரணம் என்று தன் தேற்றலை திரும்பச் சொல்லிக்கொண்டார்.

"என்னவாம்".. சந்திராவின் கேள்வி காதில் விழுந்தாலும் பேசமலிருந்தார் சிவலிங்கத்தார்.

"கேக்கிறனெல்லா"

"சும்மாதான். வாறகிழமை வரவாம்". மழுப்புவது தெரியாமலிருக்க முயற்சித்தார்.

"அப்ப என்னத்தைப் பறிகுடுத்த மாதிரி யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க.. கஸ்ரமெண்டா? எங்கட பிள்ளைக்கு நிலமை தெரியும். சமாளிப்பமப்பா."

அவருக்கு ஆறுதல் சொன்னபடியே, மகளுக்கும் மருகனுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என்ன செய்து கொடுக்கலாம் என்று சந்திரா யோசிக்க ஆரம்பித்தார்.

சகுந்தலா இரண்டாம் நாளே வந்திறங்கியதைக் கண்டதும் சந்திராவுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பிள்ளைகள் மட்டும் தாய்க்குப் பின்னால். மூத்தவன் ஒரு பையைத் தூக்கிக் கொண்டு நின்றிருந்தான். துழாவின மட்டுக்கும் கண்ணில் மாப்பிள்ளை அகப்படவில்லை.

தாயின் பார்வையுணர்ந்து சன்னமாக " அவர் வரேல்ல" என்றாள்.

"நீ வா" என்று மகளை அழைத்தபடியே, சின்னப் பேரனைத் தூக்கிக் கொண்டார்.

"பயணம் எப்பிடி? குளிச்சிட்டுவா. கெதில சாப்பிடுவம்" என பதில்களெதிர்பாராது பேசிக்கொண்டிருக்க உடைந்த குரலில் "குளிக்கோணும், ஆனா சாப்பாடு இவங்களுக்கு மட்டும் போதும்" என்று சொன்னபடி பொதியை இறக்கும் மகளைக் குழப்பத்துடன் சந்திராவின் கண்கள் ஊடுருவின.

ஏதோ சரியில்லையென்று தெரிந்தது. தாயல்லவா. இரவைக்குப் பேசலாம். வந்ததும் வராததுமாய் கிளறாமல் என்று நினைத்துக் கொண்டார். ரவுணுக்குப் போன சிவலிங்கத்தார் அடுத்தநாள் காலைதான் வந்தார். அவருடைய தேவைகளைக் கவனித்து விட்டு அறைக்குள் அழைத்தார் சந்திரா.

"என்னப்பா"

"சகுந்தலா வந்திருக்கிற வியளமே சரியில்ல. கேட்டால் பிள்ளை குமுறிக் குமுறி அழுறாளொழிய ஒண்டுஞ் சொல்றாளில்லப்பா. என்ன ஏதெண்டு உங்களுக்குத் தெரியுமா? மாப்பிள்ளையும் வரேல்ல"

"மாப்பிள்ளயா! வராததுதான் நல்லம். வந்தா வெட்டிப் பொலி போட்டிடுவன்!" தன்னை மறந்து சீறினார் சிவலிங்கத்தார்.

"என்னப்பா!"

"வேறென்ன செய்யிறது. சகுந்தலா படிப்பில்லையெண்ட குறைதான் அவன் அறுவானுக்கு இருந்ததெண்டு நினைச்சன். ஆனா அவருக்கு ஏழு வரிசக் கலியாணத்தில ரெண்டு பிள்ளப் பெத்து மற்றதுகள் குறைஞ்சிட்டுதெண்ட கவலையில நல்லாப் படிச்ச தன்னோட வேலை செய்யிறவள் ஒருத்தியை அதுக்கெண்டு கூட்டியந்திருக்கிறார் வீட்ட. கேட்ட இவளுக்கு அடியாம். சும்மாவே முரடன். நல்லகாலம் அவன்ட தாய் செத்துப்போச்சு. அந்தச் சீதேவி இருந்தமட்டுக்காவது இவள் நிம்மதியா இருந்தள்." கொட்டித் தீர்த்தார் சிவலிங்கத்தார்.

விறைத்துப் போய் நின்றிருந்த சந்திராவுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. மகள் திரும்பிப் போகப்போவதில்லையென்றது மட்டுமே அந்தத் தாய்க்குத் தெரிந்தது. ஊர்ப்பேச்சுக் கேட்க வேண்டுமே என்பதே வாகனம் போனபின் எழுகின்ற தூசி தெருவையடைப்பது போல அவர் மனதை நிறைக்கிறது.

இரவு படுத்திருக்கையில் தூக்கம் வராமல் பேசிக்கொள்கிறார்கள்.

"இப்ப என்னப்பா செய்யிறது"

"என்ன செய்யிறது? எங்கட பிள்ளை, எங்களோட இருக்கட்டும். நேற்று லோயரிட்டக் கதைக்கத்தான் ரவுணுக்குப் போன்னான்"

"லோயரோ!.. ஊர்.." சொல்லிமுடிக்கவில்லை, சிவலிங்கத்தாருக்கு வந்தது சினம். சடாரென எழுந்து உட்கார்ந்தார்.

"ஊர்ச்சனத்தைப் பார்த்துத்தான் இவளிட கலியாணத்தை முடிக்கப்பண்ணினனீ. அவளைப் படிக்கவும் விடேல்ல. படிச்சிருந்தாளெண்டா தன்ட கால்ல சுயமா தன்ட சோலியைப் பாத்துக் கொள்ளுவாள். எங்களுக்குப் பாரமா இருக்கிறதெண்டு கழிவிரக்கமும் இராது. படிக்கேலாத மொக்குப் பெட்டையெண்டாலும் பரவால்ல.. எவ்வளவு கெட்டிக்காரி. நீதான் விசரி மாதிரிக் கத்தி ஏயெல்சோதினை எடுக்க முன்னம் கட்டிக் குடுத்தனி."

"முடிஞ்சது முடிஞ்சப்பா. இப்ப என்ன செய்யிற யோசனை?"

"ஆள் கொஞ்சம் மனமாறட்டும். அடுத்த கிழமை போலக் கேட்கிறன் என்ன படிக்கப் போறாளெண்டு. இழவெடுத்த சனங்கள் என்னத்தயெண்டாலும் நினைச்சிட்டோ/கதைச்சிட்டோ போகட்டும். உதவிக்கோ வரப்போகுதுகள். என்ட பிள்ளையை அவளுக்கு விருப்பமானதில படிப்பிப்பன். நீ ஒன்டும் கதைக்கப்படாது."

"இல்லப்பா.. பிள்ளைகள.."

"சின்னனுகள் பள்ளிக்கூடத்திலயும் உன்னோடயும் என்னோடயும். படிப்பைக் கெடுத்துக் கலியாணம் செய்யாதையெண்டு சொன்னனே கேட்டியா. பிள்ளையளுக்கு அதுவும் பொம்பிளப்பிள்ளையளுக்கு இந்தக்காலத்தில படிப்பு வேணும். உலகறிவு வேணும். அது சும்மா வீட்ட இருந்தா வராது..நாலு இடம் போகோணும், சனத்தோட பழகோணும். அப்பத்தான் சகுந்தலா மாதிரிக் கலங்கி நிக்கவேண்டி வராது" என்றெல்லாம் பலவாறாய்ப் பேசி மனைவிக்கு விளங்கப்படுத்தினார்.

சந்திராவுக்கும் எதோ தெளிந்தது போல் இருந்தது.

தோட்டத்துக்குப் போகும் வழியில் கண்டு "இனிச் சொல்லும் வரை மாப்பிள்ளை நிர்மலாக்குப் பார்க்காதே, அவள் படிக்கோணும்" என்று சொல்லிப் போகும் சந்திராவை "படிச்சுக் கிழிச்சது போதும், கட்டிக் குடுக்கோணும்" என்று போன கிழமை தன்னிடம் சொன்ன அதே சந்திராவை ஒன்றும் புரியாமல் பார்த்தார் தரகர் குமரகுரு.

Labels: